கடந்த 2025-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் மணிமாலை வியாபாரம் செய்து, அதன் மூலம் இணையத்தில் ‘அழகு நட்சத்திரமாக’ உருவெடுத்தவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே. இந்தத் திடீர் புகழின் காரணமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தன.
அந்த வகையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் ‘தி டையரி ஆஃப் மணிப்பூர்’ (The Diary of Manipur) என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குப் பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளதாக மோனலிசா தற்போது கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது உடலைத் தவறான முறையில் தொட்டு அத்துமீறியதாக மோனலிசா குற்றம் சாட்டியுள்ளார். “அவர் மிகவும் மோசமான மனிதர்; திரைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இளம் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொள்கிறார்.
அவரது பெயரை உச்சரிக்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஆரம்பத்தில் தனது குடும்பத்தினரிடம் முறையிட்டபோது, முதல் படம் என்பதால் இவையெல்லாம் இயல்பாக இருக்கும் என அவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தனது முஸ்லிம் நண்பரை இந்து முறைப்படி ஒரு கோவிலில் வைத்து மோனலிசா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நாடு அறிந்த விஷயமாக இருந்தாலும், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இதனை ‘லவ் ஜிகாத்’ எனக் கூறித் தவறான பிம்பத்தை உருவாக்குவதாக மோனலிசா சாடியுள்ளார்.
மேலும், தமக்கும் தனது கணவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மத நல்லிணக்கத்தை மதிக்கும் தங்களுக்கு எதிராக இயக்குநர் மேற்கொள்ளும் இந்தச் செயல்கள் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்





