ரயில் நிலையத்தில் இளைஞன் உடலுடன் கிடந்த சூட்கேஸ்: 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடும் போலீசார்

சூட்கேஸ்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி காலை 8 மணியளவில், மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மின்சார ரயில்கள் நிற்கும் 4ஆவது நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டு அருகே நீல நிற டிராலி சூட்கேஸ் ஒன்று நெடுநேரமாகக் கேட்பாரற்று நிமிர்த்து வைக்கப்பட்டிருந்தது.

ரயில் பயணிகள் சிலர், அந்தச் சூட்கேஸ் தொடர்ந்து அதே இடத்தில் கிடப்பதால் சந்தேகம் அடைந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆரம்பத்தில், போலீசார் அவசரமாக ரயிலில் ஏறிய பயணிகள் ஒருவர் தவறவிட்டுச் சென்ற பைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று கருதி, அதை அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால், அந்தச் சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக அதிக பாரமாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இருந்ததை அடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் அதைத் திறந்து பார்த்தனர். சூட்கேஸுக்குள் ஒரு வாலிபரின் உடல் சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டிருந்த அந்த உடலில் இருந்து ரத்தம் உறைந்தும், உடல் சற்று அழுகிய நிலையிலும் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவராக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்ததும், ரயில்வே பாதுகாப்புப் படை சூப்பிரண்டு ராஜன், ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்டப் பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்புப் படையின் மோப்ப நாய்க்கு ‘ஜான்சி’ வரவழைக்கப்பட்டு, அது சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ரயில் நிலையத்தின் வெளியே சென்று பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்தின் நடைமேடையில் வந்து நின்றது. எனினும், அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

கொலையாளிகள், வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து, அதன் பின்னர் அவரது தலை, கை, கால்களைத் துண்டித்து, மீதமிருந்த முண்டத்தை மட்டும் சூட்கேசுக்குள் அடைத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர். துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்களை வேறு வேறு இடங்களில் வீசியிருக்கலாம் எனவும், அவற்றைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் ஆட்டோ ஒன்றில் வந்து, சூட்கேஸை 4ஆவது நடைமேடைப் பகுதியில் வைத்து விட்டு, அதே ஆட்டோவில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிப்பதற்காக, பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 தனிப்படைகளும், பெரம்பூர் ரயில்வே டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகளுமாக மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சந்தேக மரணப் பிரிவின்கீழ் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலமும், ஆட்டோ விபரங்கள் மூலமும் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net