தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் ட்ரம்ப் – என்ன நடக்கிறது?

ட்ரம்ப்

உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி பல்வேறு எதிர்த் தாக்கங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உடனடியாக அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஹார்மூஸ் நீரிணை ஊடாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவின் உடனடி பங்களிப்பு குறித்து குளோபல் பாங்கிங் பைனான்ஸ் செய்தித் தளம் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் முறைசாரா உரையாடலுக்காக ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இன்று செவ்வாய்க்கிழமை பிரஸ்ஸல்ஸ் நகரத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஈரான் அரசால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஹார்மூஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை நடத்தி வருகின்றன.

பிரித்தானிய நேரப்படி நேற்று திங்கட்கிழமை இரவு அவசர சந்திப்புகள் நடைபெற்றதாகவும் இன்று செவ்வாய்க்கிழமையும் அந்த உரையாடல்கள் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் அதிகளவில் கடல் கண்ணி வெடிகளை பதித்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை தனித்து அமெரிக்க படைகளால் அகற்றுவது சாத்தியமில்லை என டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கடல் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு பிரித்தானியா உதவ ஒப்புக் கொண்டுள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கடல் கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் ரோபோக்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து பிரித்தானியா இறுதி முடிவு எடுக்கவில்லை என பிபிசி ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மேலும் ட்ரம்ப் பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டில் திருப்தியடையவில்லை என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மட்டும் நம்பி ஹார்மூஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடுவதில் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையோடு இருப்பதாக புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிக்கலான சூழ்நிலையில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை ஈரான் அரசுடன் நேரடி சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் ஹார்மூஸ் நீரிணையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக புதிய முன்னேற்றம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் ஈரான் அந்த முயற்சியை எந்தளவு வரை ஏற்றுக்கொள்ளும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அதேநேரத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net