அமெரிக்காவுடன் விளையாடினால் கூடுதல் வரி: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

கூடுதல் வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு தொடர்பான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். முன்னதாக, டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும், தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் 10 சதவீதமும், பின்னர் அதிகபட்சமாக 15 சதவீதமும் இறக்குமதி வரிகளை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் விளையாட முயன்றால், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இன்னும் கடுமையான வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றி, கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பனை செய்து வரும் நாடுகள் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரி விகிதங்களை விடவும் இது மிக மோசமான நிலையை உருவாக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

டிரம்பின் இந்த 15 சதவீத வரி அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தேதியையும் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ், தற்காலிகமாக 150 நாட்களுக்கு 15 சதவீதம் வரை வரி உயர்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதால், டிரம்ப் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net