ஈரானுக்கு வலுப்பெறும் சர்வதேச ஆதரவு: நட்பு நாடுகளின் நிபந்தனைகளால் அமெரிக்கா கடும் நெருக்கடியில்

அமெரிக்கா

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஆயுத உற்பத்திக்காக பயன்படுத்தக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானை கட்டாயமாக கையெழுத்திட வைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மிரட்டல்களும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் சொந்த நட்பு நாடுகளே தற்போது அதற்கு எதிராக நிலைப்பாடு எடுத்திருப்பது வாஷிங்டனை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானை மிரட்டும் நோக்கில், அணுகுண்டு தாக்குதலையும் தாங்கக்கூடிய சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்கப்பலை அமெரிக்கா ஈரான் நோக்கி அனுப்பியுள்ளது. இந்த போர்கப்பலுடன் பல்வேறு போர் கப்பல்களும் இணைந்து பயணித்து வருகின்றன. இதன் மூலம், ஈரானை எப்படியாவது பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்தால், அமெரிக்கா கடல் வழி மட்டுமின்றி அரபு நாடுகளில் உள்ள தனது ராணுவத் தளங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆனால், ஈரானை தாக்க வேண்டும் என்றால், அதனை சுற்றியுள்ள பல நாடுகளின் வான்வெளியை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உள்ளது. இங்குதான் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

புவியியல் ரீதியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன், சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் தெஹ்ரான், அஜர்பைஜானுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இதனால், அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வேண்டுமெனில், அஜர்பைஜான் வான்வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், ஈரானை தாக்க எங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜர்பைஜான் தெளிவாக தெரிவித்துள்ளது.

அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஹுன் பைரமோவ், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் நடத்திய உரையாடலில் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நல்ல உறவு கொண்டிருந்தாலும், தாக்குதல் நோக்கத்திற்காக வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜர்பைஜான் கூறியிருப்பது, அமெரிக்காவுக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிலைப்பாடு அஜர்பைஜானால் மட்டும் எடுக்கப்பட்டதல்ல. இதற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு எதிரான எந்தவொரு விரோத ராணுவ நடவடிக்கைக்கும் தனது வான்பரப்பு, நிலப்பரப்பு அல்லது கடல் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும், அத்தகைய தாக்குதல்களுக்கு எந்தவித தளவாட ஆதரவும் வழங்கப்படாது என்றும் அந்த நாடு தெரிவித்திருந்தது.

அதேபோல், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானிய தலைமைத்துவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எந்த திசையிலிருந்து தாக்குதல் வந்தாலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியாவின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் அமெரிக்காவிடம் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை பயன்படுத்தி ஈரானை தாக்கக் கூடாது என்று அவை வலியுறுத்தியுள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் என்று இந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தாலும், ஈரானிடம் உள்ள சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் அவற்றை அச்சுறுத்துகின்றன. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும். இது அரபு நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வேறு வழியின்றி இந்நாடுகள் ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net