ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு…. புலம்பெயர் பணியாளர்கள் அவசியம்: ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

ஜேர்மனிக்கு தற்போது பெரும் அளவில் புலம்பெயர் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். செவிலியர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணமாக, baby-boomer தலைமுறை என அழைக்கப்படும் வயதான பெரும் பணியாளர் கூட்டம் ஓய்வு பெறத் தயாராக இருப்பதும், நாட்டின் பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதும் குறிப்பிடப்படுகின்றன.

ஒருபுறம் ஜேர்மனியில் வேலை செய்ய வெளிநாட்டு பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. மறுபுறம், வெளிநாட்டில் வேலை செய்து கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பும் பலரும் ஜேர்மனியைத் தேர்வு செய்கிறார்கள். இவ்வாறு இரு தரப்பிலும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் புலம்பெயர் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களை நீண்ட காலம் ஜேர்மனியில் தங்கிப் பணியாற்றுவதிலிருந்து விலக்குகின்றன.

ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு
படம்: ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு…. புலம்பெயர் பணியாளர்கள் அவசியம்: ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

மாணவர் விசாவில் ஜேர்மனிக்கு வருபவர்கள், பின்னர் பணி விசா அல்லது நிரந்தர பணி அனுமதி பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. மேலும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பெரும் செலவில் ஜேர்மனிக்கு வேலைக்காக வரும் பலருக்கு ஜேர்மன் மொழி ஒரு பெரிய தடையாக மாறுகிறது. அதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்கள் என்பதற்காக பாகுபாடு மற்றும் இனவெறுப்பு அனுபவங்களையும் சிலர் சந்திப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேலை செய்வதால் ஏற்படும் மன உளைச்சல், அதற்கு மேலாக போதிய அங்கீகாரம் இல்லாமை, நிலையான பணி அனுமதி பெற தொடர்ந்து அலைய வேண்டிய சூழல் ஆகியவை பலரையும் வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லலாமே என்ற எண்ணத்துக்கு தள்ளுகின்றன.

இந்த நிலையில், ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை உண்மையாகவே சமாளிக்க வேண்டுமெனில், வெளிநாட்டு பணியாளர்களை பாரபட்சமின்றி நடத்துதல், பணி அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் தாமதமின்றி உதவுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனக் குரல்கள் எழுகின்றன. குறிப்பாக, பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ள ஜேர்மன் மருத்துவமனைகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளிலிருந்தே இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்