அமெரிக்காவில் குடியேற்ற அடக்குமுறை; 5 வயது சிறுவன் கைது விவகாரம் சூடுபிடிப்பு

Immigration crackdown in the US; Arrest of 5-year-old boy heats up

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் கடுமையடைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக Immigration and Customs Enforcement (ICE) குடிவரவு அதிகாரிகள் விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 7ஆம் திகதி, காரிலிருந்து இறங்க மறுத்ததாக கூறப்படும் 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்பவர் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சூழலில், தற்போது 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்த சம்பவம் மேலும் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது லியாம் கோனேஜோ ராமோஸ், பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ICE அதிகாரிகள் அவர்களை வழிமறித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று, சிறுவனை முன்வைத்து வீட்டிற்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறுவனின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தந்தையும் சிறுவனும் ICE தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் தந்தை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குடும்பத்தின் வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ், 2024ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த லியாமின் குடும்பம் புகலிடம் கோரி விண்ணப்பித்த பின்னரே அங்கு வசித்து வருவதாக விளக்கினார். இருப்பினும், தந்தையும் சிறுவனும் Texas மாநிலத்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனுடன், லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் பயின்று வந்த கொலம்பியா ஹைட்ஸ் (Columbia Heights School) பள்ளியின் கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்தார்.

நீல நிறத் தொப்பி அணிந்து, ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி பயத்தில் உறைந்த லியாமின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைப்பது முற்றிலும் எல்லை மீறிய செயல் என்றும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net