27 பிரசவங்களில் 69 குழந்தைகள்… மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் நிகழ்ந்த நம்ப முடியாத சாதனை!

27 பிரசவங்களில் 69 குழந்தைகள்

இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அவரை பாதுகாப்பாக வளர்ப்பதே பலருக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. மருத்துவ முன்னேற்றங்கள், தொழில்நுட்ப வசதிகள் இருந்தபோதிலும், குழந்தை பிறப்பு என்பது உடல், மனம், பொருளாதாரம் என அனைத்திலும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு, நமது அம்மா, பாட்டி காலங்களில் ஒரே குடும்பத்தில் 2 முதல் 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்து, அவர்களை வளர்த்தது சாதாரணமாக இருந்தது. அதை நினைத்தாலே இன்றைய தலைமுறைக்கு தலைசுற்றும் நிலைதான்.

அவ்வப்போது அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்து உலகின் கவனத்தை ஈர்க்கும் சில பெண்களைப் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமீப காலங்களில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்து உயிருடன் இருப்பவர் என்ற பெயருடன் உகாண்டாவைச் சேர்ந்த மரியம் நபாடன்சி உலகம் முழுவதும் அறியப்படுகிறார். 15 கர்ப்பங்களில் இரட்டையர்கள், மூன்று குழந்தைகள், ஐந்து குழந்தைகள் என மொத்தமாக 44 குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். இதில் 38 பேர் தற்போது உயிருடன் உள்ளனர். ‘ஹைப்பர்ஓவுலேஷன்’ எனப்படும் அரிய மருத்துவ நிலை இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தாலும், இன்னும் நம்ப முடியாத ஒரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத 18ஆம் நூற்றாண்டில், ஒரே பெண் 27 முறை பிரசவித்து 69 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்றால் அது நம்ப முடியாததாகத் தோன்றும். ஆனால் அந்த சம்பவம் உண்மைதான். உலகில் அதிக குழந்தைகளை பெற்ற தாய் என்ற சாதனையை படைத்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலியேவ். 1725 முதல் 1765 வரை, சுமார் 40 ஆண்டுகளில் அவர் 27 முறை பிரசவித்து மொத்தம் 69 குழந்தைகளுக்குத் தாயானார்.

1707ஆம் ஆண்டு பிறந்த வாலண்டினா, ரஷ்யாவின் ஷுயா நகரைச் சேர்ந்த ஏழை விவசாயி ஃபியோடர் வாசிலியேவின் முதல் மனைவியாக இருந்தார். கின்னஸ் உலக சாதனை பதிவுகளின்படி, அவர் முதல் குழந்தையை 1725ஆம் ஆண்டிலும், கடைசி குழந்தையை 1765ஆம் ஆண்டிலும் பெற்றெடுத்தார். இந்த கணக்கின் அடிப்படையில், தனது வாழ்நாளில் 18 முதல் 40 ஆண்டுகள் வரை அவர் கர்ப்ப நிலையில் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வாலண்டினா நான்கு முறை நான்கு குழந்தைகளையும், ஏழு முறை மூன்று குழந்தைகளையும், பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்த 27 பிரசவங்களில் ஒரே ஒரு இரட்டைக் குழந்தை ஜோடி மட்டுமே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதுவும் அந்த காலகட்டத்தின் குழந்தை மரண விகிதத்தை கருத்தில் கொண்டால், பெரும்பாலான குழந்தைகள் உயிர் பிழைத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாகவே உள்ளது.

இதிலும் மேலும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், வாலண்டினாவுடன் பெற்ற 69 குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவரது கணவர் ஃபியோடர் தனது இரண்டாவது மனைவியுடனும் 18 குழந்தைகளை பெற்றிருந்தார். இதன் மூலம், ஃபியோடருக்கு மொத்தமாக 87 குழந்தைகள் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1782ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், மாஸ்கோ மாகாணத்தைச் சேர்ந்த 75 வயது விவசாயி ஃபியோடர் வாசிலியேவ் நல்ல உடல்நலத்துடன் உயிருடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், முதல் மனைவி மூலம் 27 பிரசவங்களில் 69 குழந்தைகளும், இரண்டாவது மனைவி மூலம் 8 பிரசவங்களில் 18 குழந்தைகளும் பிறந்ததாக தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த தகவல், இங்கிலாந்தில் உள்ள உறவினர்களுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்த ஒரு ஆங்கில வணிகரால் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1834ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திலும் இதே தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 1782ஆம் ஆண்டு நிகோல்ஸ்கி மடாலயத்திலிருந்து மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில், ஷுயா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் இரண்டு திருமணங்களில் 87 குழந்தைகளை பெற்றிருந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவருக்கு 75 வயது என்றும், 82 குழந்தைகள் உயிருடன் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, மருத்துவ வசதிகள் இல்லாத காலத்திலேயே நிகழ்ந்த இந்த சம்பவம், இன்றும் உலகம் முழுவதும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் ஒரு வரலாற்று அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net