விஜய் டிவியின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ், ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9, 100 நாட்களைக் கடந்து நேற்று 18ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவடைந்தது. 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இறுதிப்போட்டிக்கு நான்கு பேர் மட்டுமே தகுதி பெற்றனர். திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், அரோரா மற்றும் சபரி ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக தேர்வாகினர்.
இந்த சீசனின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை சபரி கைப்பற்ற, மூன்றாம் இடத்தில் விக்கல்ஸ் விக்ரமும், நான்காம் இடத்தில் அரோராவும் இடம் பெற்றனர். இறுதிப்போட்டியாளர்களாக வந்த இந்த நால்வரும் பிக் பாஸ் வீட்டில் இருந்த நாட்கள் மற்றும் அவர்கள் பெற்ற சம்பள விவரங்கள் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

சோசியல் மீடியாவில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் இளைஞர்களிடையே பிரபலமான அரோரா, ‘பலூன் அக்கா’ என்ற பெயராலும் அறியப்படுகிறார். பிக் பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராக பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர், மொத்தம் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அவர் சுமார் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் நான்காம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாண்ட் அப் காமெடியனாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம் வந்த விக்கல்ஸ் விக்ரம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தனி இடத்தை பிடித்தார். பல்வேறு டாஸ்க்களை சிறப்பாக செய்து இறுதிப்போட்டி வரை பயணித்த இவர், 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற கணக்கில், விக்கல்ஸ் விக்ரம் மொத்தமாக சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் இந்த சீசனில் மூன்றாம் இடத்தை கைப்பற்றினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் சபரிநாதன். பிக் பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற சபரி, மொத்தம் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படும் நிலையில், அவர் சுமார் 21 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த திவ்யா கணேஷ், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக டைட்டில் வின்னர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 77 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த திவ்யா, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சுமார் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதற்கு கூடுதலாக, டைட்டில் வென்றதற்காக 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சம்பள விஷயத்தில் இந்த சீசனில் அதிகம் பெற்றவர் திவ்யா கணேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.



