அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை, ஆவணங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்குடன் விமானங்கள் மூலம் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பல நகரங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க அரசு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு (2025) டிசம்பர் 31-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2,70,738 ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்துடன், அவர்களுக்கு இலவச விமான பயணம் மற்றும் அபராதங்களிலிருந்து முழுமையான மன்னிப்பும் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலி (CBP App) மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுக்குள் தாமாக வெளியேறுபவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். அமெரிக்க அதிகாரிகள், இந்த பண்டிகை காலம் சட்டவிரோத குடியேறிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும், இதனை பயன்படுத்தாதவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனவும், அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 19 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் தாமாக வெளியேறியுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் CBP செயலியில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

