வங்காளதேசத்தில் வன்முறை தீவிரம்: இளைஞர் கொலை – உடல் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு

Youth murdered body set on fire stirs up controversy

வங்காளதேசம் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் ஒசாமா பெடி, டாக்காவில் ரிக்‌ஷாவில் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுத் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக சில மத ரீதியிலான அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குற்றவாளி இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.

இத்தகைய பதற்றமான சூழலிலேயே, மைமன்சிங் மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் (வயது 30) என்பவர், சுமார் 500க்கும் மேற்பட்டோரால் கூட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர், மத உணர்வுகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பின்னர் அவரது உடல் பொது இடத்தில் தீவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு, வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து சமூகத்தினரிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net