டொனால்டு டிரம்ப், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்கா மக்களுடன் உரையாடிய போது, பாதுகாப்புப் படைவீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி வரும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு, இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம் அளவிலான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இந்த ஊக்கத்தொகை, அமெரிக்கா சுதந்திர நாடாக உருவான ஆண்டான 1776-ஐ நினைவுகூரும் வகையில் குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் விளக்கினார். ‘வாரியர் டிவிடெண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளிப் படை உள்ளிட்ட அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொடக்க வரலாற்றை மரியாதை செய்யும் இந்தத் தொகைக்கு, நாட்டின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்கிற வீரர்களைவிட தகுதியானவர்கள் யாரும் இல்லை என்றும், அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
இந்தத் திட்டத்திற்கான நிதி, அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல், பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள்மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரிகள் மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

