லண்டனில் விஜய் மல்லையாவின் 70வது பிறந்தநாளை பிரமாண்டமாக நடத்திய லலித் மோடி

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

இந்திய சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து லண்டனில் வசித்து வரும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர், பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

பணமோசடி உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, லலித் மோடி 2010ம் ஆண்டு முதல் லண்டன் நகரில் வசித்து வருகிறார். இதேபோல், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கி, நாட்டை விட்டு வெளியேறினார்.

Vijay Mallyas birthday
படம்: லண்டனில் விஜய் மல்லையாவின் 70வது பிறந்தநாளை பிரமாண்டமாக நடத்திய லலித் மோடி

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, லலித் மோடி தனது லண்டன் இல்லத்தில் பிரமாண்டமான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் Idris Elba உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. விழாவில் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா இருவரும் இணைந்து நடனமாடி மகிழ்ந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் வீடியோவை லலித் மோடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன், இந்த மாத தொடக்கத்தில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடிய லலித் மோடி, லண்டனின் மேஃபேர் பகுதியில் உள்ள பிரபலமான மடாக்ஸ் கிளப்பில் ஆடம்பர பார்ட்டி ஒன்றை நடத்தியிருந்தார். அந்த கிளப்பில் ஒரு மேஜையை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.18 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியா வந்து நரேந்திர மோடி உடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், லலித் மோடி மற்றும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்