தைபே நகரில் நிகழ்ந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். 27 வயதுடைய சந்தேகநபர், தைபே பிரதான மெட்ரோ நிலையத்தில் புகை குண்டுகளை வீசி பதற்றத்தை ஏற்படுத்திய பின்னர், மக்கள் நெரிசல் மிகுந்த வணிகப் பகுதிக்குச் சென்று வழியிலேயே பலரை கத்தியால் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவான் பிரதமர் சோ ஜங்-தை கூறுகையில், தாக்குதலாளராக அடையாளம் காணப்பட்ட சாங் வென் என்பவர் முதலில் தைபே மெயின் ஸ்டேஷனில் புகை குண்டுகள் மற்றும் தீப்பந்தங்களை வீசியதாகவும், பின்னர் சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள சோங்ஷான் நிலையம் நோக்கி தப்பிச் சென்றதாகவும் கூறினார். இடையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து ஆயுதம் எடுத்துக்கொண்டு மீண்டும் சோங்ஷான் நிலையம் அருகே வந்து மேலும் புகை குண்டுகளை வீசி, பலரை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற ஒருவரும் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருகிலுள்ள புத்தகக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் சென்ற தாக்குதலாளரை போலீசார் முற்றுகையிட்ட நிலையில், அவர் பல மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணியளவில், அலுவலக நேர முடிவில் மக்கள் அதிகமாக இருந்த வேளையில் நிகழ்ந்தது. சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில், கருப்பு உடை மற்றும் கேப் அணிந்த ஒருவர் சாலையில் புகை குண்டுகளை வீசுவதையும், கையில் பெரிய கத்தி ஏந்தி வாகனங்கள் அருகே நடந்து செல்லுவதையும் காண முடிகிறது.
வன்முறை குற்றங்கள் அரிதாக நடைபெறும் Taiwan நாட்டில், இத்தகைய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, 2014 ஆம் ஆண்டு தைபே மெட்ரோ ரயிலில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மெட்ரோ, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் சோ ஜங்-டை தெரிவித்தார். தாக்குதலாளரின் பின்னணி, தொடர்புகள் மற்றும் நோக்கம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். William Lai ஜனாதிபதியும் விரைவான விசாரணைக்கு உறுதியளித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, தாக்குதலாளருக்கு முன்பு குற்றப் பதிவு இருந்ததாகவும், அவர் காவல்துறையால் தேடப்பட்டவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்





