சிட்னி தாக்குதல்: சந்தேகநபர் மீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு; 30 நாட்களுக்குள் சுடும் பயிற்சி சாத்தியமற்றது!

சிட்னி தாக்குதல்: சந்தேகநபர் மீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு; 30 நாட்களுக்குள் சுடும் பயிற்சி சாத்தியமற்றது!

ஆஸ்திரேலியாவின் சிட்னி, பொண்ட் கடற்கரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுத் தாக்குதல் தொடர்பில், உயிருடன் தப்பியுள்ள சந்தேகநபர் மீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சஜித் அக்ரம், காவல்துறையுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நவீட் என்ற அவரது மகன், தாக்குதலுக்குப் பின்னர் மருத்துவமனையில் நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சுயநினைவு பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்தே அவர்மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அவர் இன்னும் காவல்துறை கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, பொண்ட் கடற்கரையில் தாக்குதல் நடத்திய தந்தையும் மகனும் பிலிப்பீன்ஸில் தீவிரவாத பயிற்சி பெற்றதாக எந்த ஆதாரமும் இல்லை என பிலிப்பீன்ஸ் தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தீவில் தங்கியிருந்தனர் என்பது உறுதியாகியுள்ள போதிலும், அந்தப் பயணம் பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்டதாக நிரூபிக்கும் தகவல்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.

30 நாட்களுக்குள் தீவிரவாத அல்லது குறிபார்த்துச் சுடும் பயிற்சிகளைப் பெறுவது சாத்தியமற்றது என்றும் பிலிப்பீன்ஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது. பிலிப்பீன்ஸ் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், தமது நாடு ISIS போன்ற அமைப்புகளின் பயிற்சித் தளமாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்துள்ளார்.

இதனிடையே, பிலிப்பீன்ஸுக்குப் பயணம் செய்த காலத்தில் சந்தேகநபர்கள் எந்தவொரு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net