மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்ததையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதே காரணமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இதை முன்னிட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வருத்தத்தையும் குற்றச்சாட்டையும் வெளிப்படுத்த, முன்னாள் கிரிக்கெட் நாயகன் சுனில் கவாஸ்கர் அதற்கு நேரடியான பதிலடி கொடுத்து விவாதத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளார்.
கவுதம் கம்பீர் தலைமையாக்கப்பட்டபின், டெஸ்ட் அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் பக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், இளம் அணியுடன் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது. இதனால் “அவர்களை நீக்கவில்லை என்றால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்” என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது யூடியூப் சேனலில் அஸ்வின், “எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் தனிப்பட்ட முறையில் ஓய்வு முடிவு எடுக்க நேர்ந்தது,” என்று கூறினார்.
“சரியான திட்டம் இருந்திருந்தால், கோலி இளம் வீரர்களை உருவாக்கியிருப்பார்; ரோஹித்தும் அதைப் செய்திருப்பார்; நானும் செய்திருப்பேன். அறிவுப் பரிமாற்றமே இந்திய கிரிக்கெட்டின் பலவீனமாகிவிட்டது. எங்களை அவசரமாக வெளியேற்றிவிட்டார்கள்,” என அவர் அதிருப்தியுடன் தெரிவித்தார்.
ஆனால், இந்த வாதத்தை கவாஸ்கர் நேரடியாக மறுத்தார். “ஓய்வு என்பது அவர்களே எடுத்த முடிவு. நிர்வாகம் எதிர்காலத்தை யோசிக்கச் சொல்லி இருக்கலாம். ஆனால் ‘அவர்கள் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்காவை வென்றிருப்போம்’ என்ற கருத்தை ஏற்க முடியாது,” என்றார்.
அதற்கான காரணத்தை அவர் எளிதாக விளக்கினார்: “ரோஹித், கோலி, அஸ்வின் இருந்தபோதுதான் நியூசிலாந்தில் 0–3 என ஒயிட்வாஷ் ஆகியோம். அப்போது என்ன நடந்தது? ஆஸ்திரேலியாவிலும் தோல்வி. அதனால் இப்போது அவர்களை நீக்கிவிட்டார்கள் என்பதும், அவர்கள் இருந்திருந்தால் வெற்றி நிச்சயம் என்பதும் தவறான அணுகுமுறை,” என கவாஸ்கர் குறிப்பிடினார்.
இந்த கருத்து அஸ்வின் வாதத்துக்கும் ரசிகர்களின் கோபத்துக்கும் நேரடியான ‘முடிவுரை’ போல அமைந்துள்ளது. எதுவாக இருந்தாலும், அண்மையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்விகள் கம்பீரின் “இளம் அணி திட்டம்” மீது அதிகமான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் செய்திகள்





