15க்கு 15 ஆஸ்திரேலியாவின் உலக சாதனைக்கு முற்றுப்புள்ளி! வீட்டுக்கு அனுப்பிய இந்தியா: வரலாறு காணாத சாதனை வெற்றி!

மகளிர் உலகக் கோப்பை இந்தியா சாதனை

நவி மும்பை, நவம்பர் 20: ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது செமி ஃபைனலில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது. நேற்று நவிமும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல கணிப்புகளைத் தகர்த்து, இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரமாண்ட ஸ்கோர் மற்றும் இந்தியாவின் அபார சேசிங்!

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, போப் லீச்பீல்ட் (119 ரன்கள்) மற்றும் ஆஸ்லே கார்ட்னர் (63 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 49.5 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இந்திய தரப்பில் ஸ்ரீசரிணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. 48.3 ஓவர்களில் 341/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஜெமிமா ரோட்ரிகஸ் 121* ரன்களுடன் அவுட் ஆகாமல் நின்று வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89 ரன்களுடன் வலுவான பங்களிப்பை அளித்தார். தீப்தி தீப்தி 24, ஸ்மிரிதி மந்தனா 24, ரிச்சா கோஸ் 26 ரன்கள் எடுத்து அணிக்குத் துணை நின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிம் கார்த் மற்றும் அனபல் சதர்லாந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், அவர்களால் இந்திய அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. மகளிர் உலகக் கோப்பை இந்தியா சாதனை

ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியா படைத்த வரலாறு காணாத சாதனைகள்!

முன்னதாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா ஒருமுறை கூட 200 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. மேலும், 7 முறை உலகக் கோப்பைகளை வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா தோற்கும் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் உடைத்தெறிந்து, இந்திய அணி 339 ரன்களை சேசிங் செய்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, இந்திய அணி இரண்டு முக்கிய உலக சாதனைகளைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக யுவ்ராஜ் சிங்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளரா? விவரம் இதோ!

ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாறு காணாத உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன், ஆடவர் அல்லது மகளிர் ஐசிசி உலகக் கோப்பையிலும் எந்த அணியும் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்வதில்லை. 2015 ஆடவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து 298 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய அதிகபட்சமாகும்.

2022 முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 போட்டிகளில் வென்று, மகளிர் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற அணி என்ற உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்தது. அந்த உலக சாதனை வெற்றி நடையை இப்போட்டியில் இந்திய அணி உடைத்து, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

அத்துடன், ஆஸ்திரேலியாவை மகளிர் உலகக் கோப்பை செமி ஃபைனலில் 2 முறை (2017, 2025*) தோற்கடித்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 2011 போல சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல இந்திய மகளிரணி இமாலய நம்பிக்கையுடன் தயாராகி வருகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net