மெல்போர்ன், அக்டோபர் 31: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இளம் துவக்க வீரர் அபிஷேக் சர்மா தனது அபாரமான பேட்டிங் மூலம், தான் ஏன் நம்பர் ஒன் டி20 பேட்டர் என்பதை தனி ஆளாக நின்று நிரூபித்து அனைவரது மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் தடுமாற்றமான பேட்டிங்: அபிஷேக்கின் தனி ஒருவரின் போராட்டம்!
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணி 32 ரன்களுக்கே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவை சந்தித்தது. சுப்மன் கில், சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இச்சூழலில், ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்த அபிஷேக் சர்மா, 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு தனி ஒருவனாக உதவினார்.
இதையும் படிங்க : 125 ரன்களுக்கு ஆல் அவுட்! நம்பர் 1 இந்தியாவை அசால்ட்டாக சாய்த்த ஆஸி! டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு 2வது மோசமான தோல்வி!
அவரைத் தவிர, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மட்டுமே 35 ரன்கள் எடுத்து ஓரளவுக்குப் பங்களித்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் 10 ரன்கள் கூட தொடாத நிலையில், அபிஷேக் ஷர்மாவின் இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அவருடன் யாராவது ஒருவர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால், நிச்சயம் இந்திய அணி இன்னும் நல்ல ஸ்கோரை எட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி: தொடரில் முன்னிலை!
பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் நடைபெறாத நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் தோல்வி இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தாலும், அபிஷேக் சர்மாவின் தனிப்பட்ட அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. அடுத்த போட்டிகளில் அவர் இதே ஃபார்மைத் தொடர்வாரா மற்றும் இந்திய அணி தொடரில் மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகள்





