இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து, ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை ஓரம்கட்ட பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த நிலையில், விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், கோலின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், விராட் கோலி முடிவை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோலியிடம் கேட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் சர்மா டெஸ்ட்டில் இருந்து விலகிய நிலையில், விராட் கோலியும் விலகினால் அது இந்திய அணியில் அனுபவ வீரர்களுக்கு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் சொதப்பினால் தன் மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் அழுத்தத்தை விராட் கோலி விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 36 வயதான விராட் கோலி 9230 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்குவிப்பு 254 ஆகும். இதுவரை 30 சதங்களையும், 31 அரைச் சதங்களையும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ளார். இதில் 1027 நான்கு ஒட்டங்கள் மற்றும் 30 சிக்சர்களும் உள்ளன.
இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.