இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டத.
இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய 8 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் மியான் மொஹமட் ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக கடந்த 2016, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றிருந்தது.
இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால், நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் துவங்கும் என எதிர்பார்கப்பட்டுள்ளது. விரைவில் போட்டிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைபோலவே பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.