தென்னாப்பிரிக்காவின் ரஷ்டன்பர்க் நகருக்கு அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திற்குள் நேற்று இரவு 22 பேர் சட்டவிரோதமாக நுழைந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுரங்கத்திற்குள் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து கனிமங்களை வெட்டி எடுத்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைவிடப்பட்ட சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் நடவடிக்கைகள் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
