இலங்கை வீரருடன் வாக்குவாதம்: வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை பாயுமா?

வைபவ் சூர்யவன்ஷி

தம்புள்ளையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய இலங்கை அணியும் 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்ததால் போட்டி டை ஆனது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை-ஏ அணி 16/0 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய-ஏ அணி 9/0 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.

வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம் வார்த்தைகளை விட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சூர்யவன்ஷி, இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக வைபவ் சூர்யவன்ஷி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் அல்லது டீமெரிட் புள்ளிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 மாதங்களுக்குள் 4 டீமெரிட் புள்ளிகள் சேகரிக்கும் வீரர் தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், சூர்யவன்ஷி மீதான நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net