உலக கிரிக்கெட் வரலாற்றையே ஒட்டுமொத்தமாக உலுக்கிப் போடும் வகையில், வெறும் 15 வயதே நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) என்ற பீகாரைச் சேர்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரர், இந்திய சீனியர் டி20 கிரிக்கெட் அணியில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், கடந்த 1989-ஆம் ஆண்டு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய அணிக்குத் தேர்வாகிப் படைத்த 36-ஆண்டு வரலாற்றுச் சாதனையை, இந்த 15 வயது சிறுவன் தவிடுபொடியாக்கியுள்ளார். தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கான டி20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது, உலக கிரிக்கெட் ரசிகர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனை சிறிய வயதில் இந்திய அணியின் கதவுகள் இவருக்குத் திறக்கப்படக் காரணம், அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இவர் காட்டிய அசுரத்தனமான பேட்டிங் வேட்டைதான். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய 16 போட்டிகளில் சுமார் 776 ரன்களைக் குவித்து, தொடரின் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பியை’ (Orange Cap) வென்று அசத்தினார் வைபவ்.
உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான பும்ரா, கம்மின்ஸ் போன்றோரின் பந்துவீச்சை துவம்சம் செய்து, 237.30 என்ற அசாத்தியமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது மட்டுமின்றி, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் (72 சிக்ஸர்கள்) அடித்த கிறிஸ் கெயிலின் நீண்டகால உலக சாதனையையும் இந்த 15 வயது சிறுவன் முறியடித்துக் காட்டினார்.
இவரது அபாரமான ஆட்டத்திற்காக ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர், எமர்ஜிங் பிளேயர், சூப்பர் ஸ்ட்ரைக்கர் மற்றும் சூப்பர் சிக்ஸஸ் உட்பட ஐந்து தனிப்பட்ட விருதுகளை வென்று, ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில், சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 26 அன்று நடைபெறும் முதல் போட்டியில் வைபவ் இடம் பெற்றுப் பேட்டிங் செய்ய களம் இறங்கினால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிற்காக அறிமுகமான மிக இளவயது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையும் வரலாற்றில் மாற்றி எழுதப்படும். அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்த இளம் புயல் விளையாடவுள்ளதால், ஜூன் 26 அன்று உலக கிரிக்கெட் புதியதொரு சரித்திரப் பக்கத்தை எழுத ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
இளம் வயதிலேயே உலகமே வியக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபாரமான வளர்ச்சி, விளையாட்டுத் துறையைத் தாண்டி கல்வித்துறையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவரது அசாத்திய மன உறுதி, மன அழுத்தத்தைக் கையாளும் திறன் மற்றும் விளையாட்டுப் பக்குவத்தை ஆராய்வதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற ‘ஐஐஎம் இந்தூர்’ (IIM Indore) மேலாண்மை நிறுவனம், வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஒரு பிரத்யேக ஆய்வுக் கட்டுரையை (Case Study) நடத்தும் என்று அறிவித்துள்ளது. இவரது பயணம், மனித முன்னேற்றத்தின் ஒரு அரிய எடுத்துக்காட்டு என்று அந்நிறுவனத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்




