விராட் கோலியை “சுயநலவாதி” என சூர்யவன்ஷி கூறினாரா? உண்மை என்ன?

சூர்யவன்ஷி

15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலியை “சுயநலவாதி” என்றும் “மெதுவாக விளையாடுபவர்” என்றும் விமர்சித்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ, ஐபிஎல் 2026 முடிவடைந்த பின்னர் அதிக அளவில் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த காணொளி முழுமையாக போலியானது என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே தெளிவுபடுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோவாக இது இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில், ஹர்சா போக்லே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே நடைபெற்றதாக காட்டப்படும் உரையாடலில், கோலியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹர்சா போக்லே கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு சூர்யவன்ஷி அவமதிப்பான பதில்களை வழங்கியதாகவும் அந்த காணொளி காட்டுகிறது.

சூர்யவன்ஷி

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த ஹர்சா போக்லே, தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோ முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். அந்த உரையாடல் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும், வைபவ் சூர்யவன்ஷியிடம் அந்த வகையான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் இளம் வீரரை தவறாக சித்தரிப்பது மிகுந்த விஷமத்தனமான செயல் எனவும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார். டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய போலி உள்ளடக்கங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடும் என்பதால், சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், வைபவ் சூர்யவன்ஷி விராட் கோலியை விமர்சித்ததாக கூறப்பட்ட தகவல் உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net