அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு எதிராக கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்த அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்தது. அந்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வரி விதிப்பு நடைமுறை நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், “கட்டாய உழைப்பு” தடுப்பு விதிகளை பின்பற்றாத நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அமல்படுத்த USTR பரிந்துரை செய்துள்ளது. அதன் படி, குறிப்பிட்ட நாடுகளுக்கு 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் கனடா, மெக்சிகோ, தைவான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கலாம் எனவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் “Forced Labour” தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை தொழிலாளர் மற்றும் சிறைத் தொழிலாளர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாத நாடுகளுக்கு எதிராக இந்த வரி நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை தற்போது பொதுமக்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்



