ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கடற்படை அமெரிக்கக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தாலோ, கண்ணிவெடிகள் வைத்தாலோ, அவர்களைக் “கண்டவுடன் சுட்டு அழிக்க” அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடுக்கும் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கடற்படை முற்றுகை மிகவும் வலுப்படுத்தப்பட்டு, இதுவரை 34 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே, அமெரிக்க கடற்படைச் செயலர் ஜான் ஃபிலன், டிரம்பின் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஷயம், இந்த அமைதியைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவர், ஈரானுடனான போர் மற்றும் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ திட்டத்தின் மூலம், கடந்த சில வாரங்களில் ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகளை எட்டியுள்ளதாக விளக்கமளித்தார்.
“ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடாமல் தடுப்பதே இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம். தற்போது இந்தப் போர் ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு முன்வர இது ஒரு நல்ல வாய்ப்பு” என்று ஹெக்செத் கூறினார். ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை மிகவும் பலமாக இருப்பதாகவும், விரைவில் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபரேஷன் எபிக் ஃபியூரியில் இணையும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் தடுக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 34 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, M/V Touska என்ற கப்பல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஈரானுடன் தொடர்புடைய M/T Tifani மற்றும் M/T Majestic X ஆகிய கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைக்க முயன்றாலோ அல்லது அமெரிக்கக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தாலோ, அவர்களைக் “கண்டதும் சுட்டு அழிக்க” அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக ஹெக்செத் கூறினார். இதற்கான தெளிவான விதிமுறைகள் அமெரிக்கக் கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதை அதிபர் டிரம்ப் காலவரையறையின்றி நீட்டித்துள்ளார். எனினும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்ட அவர் அவசரம் காட்டவில்லை. இதே நேரத்தில், இஸ்ரேல்-லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், டிரம்பின் நடவடிக்கைகள் மீது அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் கடற்படைச் செயலர் ஜான் ஃபிலன், டிரம்பின் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, கண்டவுடன் சுடும் உத்தரவுடன் ஈரான்-அமெரிக்க மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.


