ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்கா–பிரித்தானியா உறவில் விரிசல்? டிரம்ப் வெளிப்படையான குற்றச்சாட்டு

ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்கா–பிரித்தானியா உறவில் விரிசல்

அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு முன்பைப்போல் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா நாளிதழான The Sunக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார். ஒரு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மிக உறுதியான மற்றும் நெருக்கமான உறவு இருந்ததாக கூறிய அவர், தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய பிற நாடுகளுடன் அதிக நெருக்கம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பிரித்தானியா பிரதமர் கியர் ஸ்டாமர், அமெரிக்காவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு உதவியாக இல்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். எனினும், “பிரிட்டனை நான் நேசிக்கிறேன்; ஆனால் அந்நாட்டிடம் இருந்து அதிக உதவியை எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரான் ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா, பிரித்தானியாவின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்பு ஸ்டாமர் கூறியிருந்தார். ஆனால், அதற்கான அனுமதி வழங்க நீண்ட காலம் எடுத்ததாக டிரம்ப் விமர்சித்தார்.

மேலும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா முழுமையான ஆதரவை வழங்க மறுத்தது ஏமாற்றமளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். நேட்டோ கூட்டணியில் உள்ள இந்த இரு நாடுகளும், தங்களது விமானப் படைத் தளங்களை ஈரானைத் தாக்க பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததாக அவர் கூறினார்.

ஸ்பெயினுடன் உள்ள வர்த்தகத் தொடர்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க நிதியமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த ஸ்பெயின், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் வரம்பிற்குள் உள்ள நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு வழங்க முடியும் என விளக்கம் அளித்தது.

பிரித்தானியா தொடக்கத்தில் ஈரான் மீதான தாக்குதலில் கலந்துகொள்ள மறுத்ததாக டிரம்ப் சாடினார். பின்னர், குறிப்பிட்ட சில தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பிரித்தானியாவின் இரண்டு தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துகள், அமெரிக்கா–பிரித்தானியா உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கும் வகையில் பார்க்கப்படுகின்றன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net