சனிக்கிழமை காலை, ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கை இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
புளோரிடாவிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல்களில் பிரித்தானியா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், தனது நாட்டு மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரித்தானிய போர் விமானங்கள் மத்திய கிழக்கின் வான்வெளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள பிரித்தானிய தளங்களுக்கான பாதுகாப்பு மிக உயர்ந்த நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் உடனடியாகத் தனது ஆயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் வெடிச்சத்தங்கள் மற்றும் அபாயச் சங்குகள் ஒலித்துள்ளன.
துபாயின் பாம் ஜுமேரா பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தத் தாக்குதல்களுக்கு “மிகக்கடுமையான” பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் வான்வழிப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
மேலும், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மேலும் தாக்குதல்களை நடத்தாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானிய மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கும் என்று நைஜல் ஃபரேஜ் போன்ற தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது ஒரு “சட்டவிரோதமான மற்றும் கொடூரமான தாக்குதல்” என்று பசுமைக் கட்சித் தலைவர் ஜாக் போலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.



