எப்ஸ்டீன் தொடர்பு சர்ச்சை – பீட்டர் மண்டேல்சன் கைதாகி, பிணையில் விடுதலை!

பிரித்தானியா

அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானியா தூதர் பீட்டர் மண்டேல்சன், பொதுப் பதவியில் இருந்த காலத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இலண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 72 வயதான அவர் திங்கள்கிழமை (23) வடக்கு இலண்டனின் கேம்டன் பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சந்தை நிலவரம் தொடர்பான முக்கிய அரசுத் தகவல்களை அமெரிக்க குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில், 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சொத்து விற்பனைத் திட்டங்கள் மற்றும் வங்கியாளர்களின் போனஸ் வரி தொடர்பான விவரங்கள் குறித்து இருவரும் மின்னஞ்சல் வழியாக தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2025இல் அமெரிக்காவிற்கான பிரித்தானியா தூதராக நியமிக்கப்பட்ட மண்டேல்சன், எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசுக்கு இது முக்கியமான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேட்னோக் விமர்சித்துள்ளார். மேலும், தனது நியமனத்தின் போது தகுதிச் சரிபார்ப்பு செயல்முறையில் தவறான தகவல் வழங்கியதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தான் எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயத்திற்காக செயல்படவில்லை என்றும் மண்டேல்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இலண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் துறையினர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் மீளாய்வு செய்யப்படுவதையும், விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, பீட்டர் மண்டேல்சன் மீது பாலியல் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றாலும், எப்ஸ்டீனுடனான நட்புடன் தொடர்புடைய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net