2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அணியின் வெற்றிப் பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முழுமையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் மற்றும் அணியின் தீர்மானங்களை அவர் விமர்சித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்கள் மட்டுமே வீசி 14 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்தினார். சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவருக்கான நான்காவது ஓவர் வழங்கப்படாதது கவனிக்கத்தக்கதாக அமைந்தது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ஒரு பேட்டர் சிறப்பாக விளையாடினால் அவரை நடுப்பாதியில் வெளியே வரச் சொல்ல மாட்டீர்கள்; ஆனால் ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக 24 பந்துகள் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அந்த முழு வாய்ப்பையும் வழங்காதது சரியா என்ற கேள்வியை எழுப்பினார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில்தான் வருண் தனது 4 ஓவர்களையும் முழுமையாக வீசினார் என்றும், அதே வாய்ப்பு மற்ற போட்டிகளில் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், பந்துவீச்சாளர்களுக்கும் தங்கள் லயத்தை அடைய தொடர்ச்சியான ஓவர்கள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 194 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 176 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதில் வருண் சக்கரவர்த்தி மேக்ஸ் ஓ’டவுட், கொலின் அக்கர்மேன் மற்றும் ஆர்யன் தத் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஆர்யன் தத்தை அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் அட்ரியன் லீ ரூக்ஸ், வருண் சக்கரவர்த்திக்கு டிரஸ்ஸிங் ரூமில் சிறப்புப் பதக்கம் வழங்கி கௌரவித்தார். விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வருண், உண்மையான சவால் இனி தொடங்கும் சூப்பர் 8 சுற்றில்தான் இருப்பதாகவும், அதற்காக அணி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
லீக் சுற்றில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. மறுபுறம், ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.
மேலும் செய்திகள்





