பிரித்தானியா, Wales பகுதியில் அமைந்துள்ள Barry நகரில், தனது தாய்க்கு மளிகைப் பொருட்கள் வழங்கச் சென்ற 38 வயதான கம்ரான் அமான் மீது இனவெறி நோக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கொலைக்குச் காரணமாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், அமான் தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 17 வயதான Marcus Staniforth மற்றும் 16 வயதான மற்றொரு சிறுவன் அவரை வழிமறித்தனர். எந்தவிதத் தூண்டுதலும் இன்றி, அவர்கள் அமான் மீது இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலின் போது, மார்கஸ் ஸ்டானிஃபோர்த் வீட்டிற்குள் சென்று பெரிய கத்தியை எடுத்துவந்து, அமான் மீது கடுமையான குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையிலும், குற்றவாளிகள் இனவெறி வார்த்தைகளால் அவரை இகழ்ந்ததாகவும், பின்னர் ஆதாரங்களை அழிக்க கத்தியையும் தங்களது கைகளையும் ப்ளீச் கொண்டு சுத்தம் செய்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Griffiths, இது “திட்டமிட்ட, தூண்டுதலற்ற மற்றும் கொடூரமான இனவெறித் தாக்குதல்” எனக் குறிப்பிட்டார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட மார்கஸ் ஸ்டானிஃபோர்திற்கு குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு சிறுவனுக்கு 15 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அமான் மனைவி கலீலா ஜேம்ஸ், இந்தச் சம்பவம் தங்களது நான்கு வயது மகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தந்தை திரும்பி வரமாட்டார் என்ற அச்சத்தில் குழந்தை பிரிவை அஞ்சி வாழ்ந்து வருவதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்தார். அமான் தாயார் ஷாநாஸ் அமான், மகன் கொல்லப்பட்டதன் பின்னர் குடும்பம் முழுவதும் பயத்துடனும் துயரத்துடனும் வாழ்ந்து வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகள்





