சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு: 80 பயணிகளுடன் சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்து

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவு

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்டாக்கிரேபென் பகுதியில் உள்ள கோப்பன்ஸ்டெயின் கிராமம் அருகே, 80 பயணிகளுடன் சென்ற ரெயில் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியுள்ளது.

ரெயில் அந்த வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து பெரிய பனிக்கட்டிகள் உடைந்து உருண்டு வந்த நிலையில், அவை நேரடியாக ரெயில் மீது மோதின. இதன் தாக்கத்தில் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பல பயணிகள் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, ஆம்புலன்சுகள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளை தொடங்கினர். இதுவரை 30 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து சுவிட்சர்லாந்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net