கனடா மாணவர் விசா விதிகளில் அதிரடி மாற்றம் – இனி என்ன செய்ய வேண்டும்?

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் சில மாணவர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பல்வேறு மாகாணங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் கூட்டுப் பாடநெறிகளில் சேரும் மாணவர்கள் இனி ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தனித்தனியாக அத்தாட்சி கடிதம் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு மாகாண அத்தாட்சி கடிதம் போதுமானதாக இருக்கும்.

கனடா மாணவர் விசா
படம்: கனடா மாணவர் விசா விதிகளில் அதிரடி மாற்றம் – இனி என்ன செய்ய வேண்டும்?

மேலும், பொது கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அத்தாட்சி கடிதம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில தொழிற்கல்வி பாடநெறிகளுக்கும் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், CEGEP கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அத்தாட்சி கடிதத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டாலும், கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அரசு கணிசமாக குறைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இலக்கு 155,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2025 ஆம் ஆண்டில் 305,900 மாணவர்கள் சேர்க்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவும் வீட்டு வசதி பற்றாக்குறை மற்றும் சமூக சேவைகளின் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விசிட்டிங் மாணவர்கள் மற்றும் பட்டதாரி பார்வையாளர்கள் வழக்கம்போல் அத்தாட்சி கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கும். இந்த புதிய விதிகள் சில மாணவர்களுக்கு உதவியாக இருந்தாலும், மொத்த சர்வதேச மாணவர் சேர்க்கையை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்