மினசோட்டாவில் குடியேற்ற சோதனை நடவடிக்கை நிறைவு – ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

மினசோட்டா

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட குடியேற்ற அமுலாக்க நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எல்லை பாதுகாப்பு தொடர்பான விசேட அதிகாரி டொம் ஹோமன் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் அனுமதியுடன் இந்த அதிரடி சோதனைகள் நிறுத்தப்பட்டதாகவும், நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ நிறைவு பணிகளை மேற்பார்வையிட தாம் இன்னும் சில நாட்கள் மினசோட்டாவில் தங்கியிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அமுலாக்க நடவடிக்கைகளின் போது 4,000-க்கும் மேற்பட்ட ஆவணமற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் நடைபெறும் நிலையில் ரெனி குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி என்ற இரண்டு அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்களின் பின்னர் அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. மினியாபோலிஸ் நகர மேயர் ஜேக்கப் ஃப்ரே மற்றும் மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், உள்ளூர் சிறைகள் மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் பெடரல் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net