கனடாவில் துப்பாக்கி மரணங்கள் அதிகரிப்பு – புதிய ஆய்வு எச்சரிக்கை

கனடாவில் துப்பாக்கி மரணங்கள்

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது கனடாவில் துப்பாக்கி வன்முறை குறைவாக இருந்தாலும், ஜி20 நாடுகளில் பலவற்றை விட துப்பாக்கி தொடர்பான மரணங்கள் அதிகமாக பதிவாகி வருவதாக புதிய ஆய்வு தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தளமாகக் கொண்டு செயல்படும் சுயாதீன ஆய்வு நிறுவனம் “Small Arms Survey” வெளியிட்டுள்ள தரவுகள் இந்த நிலையை வெளிப்படுத்துகின்றன.

அந்த ஆய்வின் படி, ஜி20 நாடுகளில் துப்பாக்கி தொடர்பான கொலை விகிதத்தில் கனடா ஏழாவது இடத்தில் உள்ளது. கனடாவில் 100,000 மக்களுக்கு சராசரியாக 0.9 துப்பாக்கி வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த விகிதம் ரஷ்யா, இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளில் துப்பாக்கி கொலை விகிதத்தில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. அங்கு 100,000 மக்களுக்கு 22.37 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பிரேசிலில் 18.65 மரணங்களும், அமெரிக்காவில் 6.74 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதற்கு மாறாக, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் துப்பாக்கி கொலை மரணங்கள் பதிவாகவில்லை. சீனாவில் இந்த விகிதம் 0.03 ஆக காணப்படுகிறது.

இதற்கிடையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் அமைந்துள்ள டம்ப்லர் ரிட்ஜ் சமூகத்தில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சந்தேகநபரை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net