அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புதல்

இந்திய மாணவி

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தொடர்பான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜான்வி கந்துல்லாவின் குடும்பத்தினருக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜான்வி கந்துல்லா, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காவல் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. மோதி தாக்கியதில் ஜான்வி சுமார் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சில அதிகாரிகள் கேலி கலந்த கருத்துக்களை பகிர்ந்த தொலைபேசி உரையாடல் உடல் கேமராவில் பதிவாகியிருந்தது. உயிரிழந்த மாணவி குறித்து அவமதிப்பாக பேசப்பட்டதாக கூறப்படும் அந்த உரையாடல் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், குறித்த பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனம் செலுத்தப்பட்டதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில், ஜான்வி கந்துல்லாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை சமரசமாக முடிக்க சியாட்டில் நிர்வாகம் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net