தொழில்நுட்ப கோளாறால் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

தொழில்நுட்ப கோளாறால் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

சோமாலியாவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானியை அந்த நாட்டின் விமான நிறுவனம் பாராட்டியுள்ளது.

ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை காலை மொகாடிஷுவிலிருந்து புறப்பட்ட ஃபோக்கர் 50 வகை விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து விமானத்தை மீண்டும் தரையிறக்க முடிவு செய்யப்பட்டதாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் முதலில் ஓடுபாதையில் இறங்கியிருந்தாலும், பின்னர் ஓடுபாதையைத் தாண்டி அருகிலுள்ள கடற்கரையில் சென்று நின்றதாக அதிகாரிகள் கூறினர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் அமைதியாக இறங்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க ஒன்றிய படைகள் விரைவாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net