ஈரானை விட்டு வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு – தாக்குதல் அச்சத்தில் அதிகரிக்கும் பதற்றம்

அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு

ஈரானில் வசித்து வரும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது ராணுவ மற்றும் ரகசிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஈரான் கடல் எல்லைகளுக்கு அருகில் அமெரிக்காவின் சக்திவாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் தாக்குதல் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ராணுவ நடவடிக்கை நடைபெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதற்கு முன்பும் இதுபோன்ற பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ சூழ்நிலை அதிக சிக்கலாக இருப்பதால் இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை கொண்ட நாடாகும். அந்நாடு தற்போது அணுசக்தியை மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் ஏற்படக்கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உள்ளது.

இதனால் ஈரான் அணு ஆயுத திட்டங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோரிக்கையை ஈரான் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டாலும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அமெரிக்கா அனுப்பியுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் 90க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும் இந்த கப்பல் அணு ஆயுத தாக்குதல் மூலம் மட்டுமே அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net