வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனாக இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கிறது. கடந்த தொடரைப் போலவே இந்த முறைவும் 20 அணிகள் போட்டியில் கலந்துகொள்கின்றன.
இந்த நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது கணிப்பில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தனது கணிப்பில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று கூறியுள்ளார். முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதே அணிகளைத் தேர்வு செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தனது கணிப்பில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறும் என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என கணித்துள்ளார்.
முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்திய அணியை அரையிறுதிக்கான முக்கிய அணியாக தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்





