வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பாக பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராயுமாறு, பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.
அந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டை புனரமைத்து அவரது சகோதரிக்கு கையளிப்பதற்கான யோசனை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், குறித்த விவகாரம் தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்றும், உண்மை நிலையை உறுதிப்படுத்த பொலிஸாருக்கு தகவல்களை சேகரித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் இந்த விடயம் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்





