ICC எங்களைத் தண்டிக்க முடியாது… பிசிசிஐக்கு மட்டும் தனி சட்டமா? – பாகிஸ்தான் வாரிய முன்னாள் தலைவர்

பாகிஸ்தான்

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ‘ஏ’ லீக் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிப்ரவரி 15 அன்று கொழும்புவில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி, பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில் விளையாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவரான Ehsan Mani, ஐசிசியின் எச்சரிக்கைகளுக்கு கடுமையாகப் பதிலளித்துள்ளார். அரசு உத்தரவுகளைப் பின்பற்றியதற்காக பாகிஸ்தானைத் தண்டிக்க International Cricket Council-க்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஐசிசி தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு இரட்டைத் தரத்தை வெளிப்படுத்துவதாக எஹ்சான் மணி குற்றம்சாட்டினார். 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்ததை நினைவூட்டிய அவர், ஒரே விஷயத்திற்கு ஒரு நாட்டுக்கு ஒரு நீதி, மற்றொரு நாட்டுக்கு வேறு நீதி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “அரசின் உத்தரவுகளைப் பாகிஸ்தான் பின்பற்றினால், அதற்காக எந்த விதமான தடையையோ அல்லது தண்டனையையோ விதிக்க முடியாது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா விளையாட மறுத்ததற்கும் இதுவே காரணமாக கூறப்பட்டது. அப்போது ஐசிசி எந்தத் தீர்வையும் முன்வைக்காமல் பார்வையாளராகவே நின்றது. இப்போது மட்டும் வேறு நிலைப்பாடு எடுப்பது இரட்டை நீதியாகும்,” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில், ஐசிசி விடுத்துள்ள எச்சரிக்கைகளை பாகிஸ்தான் தரப்பு மீண்டும் நிராகரித்துள்ளது. பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டுமல்லாமல், நாக் அவுட் சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும், அரசு எடுக்கும் முடிவையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் தங்களின் அரசின் முடிவை திங்கள்கிழமை Pakistan Cricket Board, ஐசிசிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், இந்த முடிவு தொடர்ந்தால் பாகிஸ்தான் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net