பிரித்தானியாவில் கனமழை, வெள்ள அபாயம்: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

புயல் சந்திரா தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் பல பகுதிகளில் மீண்டும் மோசமான வானிலை நிலவக்கூடும் என UK Met Office எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் பனி மற்றும் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை முதல் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் குறையும் வாய்ப்பு இருப்பதால், சாலை விபத்துகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மஞ்சள் எச்சரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பாளர்களின் கணிப்பின்படி, Dartmoor பகுதியில் 30 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும். அதேபோல் Devon, Cornwall, Dorset மற்றும் Somerset ஆகிய பகுதிகளில் 10 முதல் 20 மில்லிமீட்டர் வரை பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கனமழையால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிராபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net