சொந்த மண்ணில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைக்க இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்திய அணியின் மீது எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த டி20 தொடரையும் இழக்காத நிலையில் உள்ளது. இதுவரை நடப்பு சாம்பியனாக இருந்து கோப்பையைத் தக்கவைத்த அணியும் இல்லை; அதேபோல், சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற அணியும் இல்லை. அடுத்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ள இந்த தொடரில், இந்திய அணி இந்த இரு சாதனைகளையும் ஒரே நேரத்தில் நிகழ்த்தக் காத்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், பல வீரர்களுக்கு இது முதல் உலகக்கோப்பை என்பதால், அவர்கள்மீது அழுத்தம் குறைவாக இருக்கும் என்றும், தங்களை நிரூபிக்க இது சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், முந்தைய உலகக்கோப்பையை வென்ற அணியிலிருந்து அனுபவம் மற்றும் திறமை கொண்ட வீரர்களும் அணியில் இருப்பது இந்தியாவுக்கு பலமாக அமையும் என்றார்.
ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பது பெரிய பலம் என்றும், ஹர்திக் பாண்டியா தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாகவும் சாஸ்திரி குறிப்பிட்டார். பந்து மற்றும் பேட் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் அவருக்கு இருப்பதாக அவர் கூறினார். அதேபோல், சிவம் தூபே அணியில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், மெகா ஐசிசி தொடருக்கு முன் சில காயங்கள் கவலை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். வாஷிங்டன் சுந்தர் தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், நியூசிலாந்து தொடருக்குப் பிறகு திலக் வர்மா அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். திலக் வர்மா ஃபிட்டாக இருந்தால், இடதுகை பேட்ஸ்மேனாக மேல்வரிசையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுழற்பந்து வீச்சு குறித்து பேசுகையில், அந்த துறையில் இந்தியாவிடம் போதுமான பலம் இருப்பதாக ரவி சாஸ்திரி கூறினார். வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் போன்ற மாறுபட்ட திறன் கொண்ட வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது என்றார்.
ஆனால், சாம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ளும் அழுத்தமும், சொந்த மண்ணில் விளையாடும் எதிர்பார்ப்பும் அணியின் மீது தாக்கம் ஏற்படுத்தலாம் என அவர் எச்சரித்தார். டி20 போட்டிகளில் 10 அல்லது 15 நிமிடங்கள் மோசமாக சென்றாலே ஆட்டத்தின் போக்கு மாறிவிடும் என்றும், அந்த நேரத்தில் அழுத்தத்தை சரியாக கையாள்வதே முக்கியம் என்றும் சாஸ்திரி வலியுறுத்தினார். இந்திய அணி தொடரை நன்றாகத் தொடங்கினால், இடையிலான தடுமாற்றங்களை சமாளிக்க பேட்டிங் வரிசையில் போதுமான ஆழம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


