ஜோதிடத்தில் சனிபகவான் கர்ம காரகனாக விளங்குகிறார். ஒன்பது கிரகங்களில், மனிதனுக்கு ஒரு ஆசிரியரைப் போல இருந்து வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்பதை உணர்த்தி, சரியான பாதையில் வழிநடத்தும் கிரகம் சனி பகவானே. இருப்பினும், சனி என்றாலே பலருக்கும் காரணமற்ற பயமும் தவறான புரிதலும் நிலவி வருகிறது.
உண்மையில் சனிபகவான் ஒருவரை தண்டிப்பதற்கு முன்பாகவே பல வாய்ப்புகளை வழங்குவார். அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் மட்டுமே, அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக சில கடினமான அனுபவங்களை ஏற்படுத்துகிறார். மிக மெதுவாக நகரும் சனி, அதேபோல் பொறுமையாக காத்திருந்து, காலம் கனியும் போது தான் தனது பலனை வெளிப்படுத்துகிறார். அதனால் தான் “சனி கொடுக்க எவர் தடுப்பார்” என்ற பழமொழி நிலைத்திருக்கிறது.
சனிபகவான் மிகுந்த பொறுமைசாலி. அவர் ஒரு மனிதனை மெதுவாக செதுக்கி, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சக்தி கொண்டவர். ஒருவருக்கு நல்ல ஆயுளையும் நிலையான வாழ்க்கையையும் வழங்கக்கூடிய கிரகமாகவும் சனி பகவான் திகழ்கிறார். எனவே, சனி எப்போதும் தீங்கு மட்டுமே செய்கிறார் என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது.
ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் 3, 6, 7, 10 மற்றும் 11 ஆகிய இடங்களில் அமர்ந்தால், அவர் மிகவும் சுபத்துவமாக செயல்படுவார். குறிப்பாக சனிக்கு வீடு கொடுக்கும் கிரகங்கள் உச்சம் அல்லது ஆட்சி நிலையில் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை நிலை சிறப்பாக அமையும். உதாரணமாக, சிம்ம லக்னத்திற்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து, அந்த இடத்தின் அதிபதி அவரை பார்வை செய்தால், சனி மிகச் சிறந்த பலன்களை வழங்குவார்.
மேலும், சனிபகவானின் தசா–புத்தி காலம் 19 ஆண்டுகள் நடைபெறும் போது, ஒருவரின் ஜாதக அமைப்பு வலுவாக இருந்தால், அந்த நபரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் சக்தி சனிக்கு உண்டு. இருப்பினும், ஒரு ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் சேர்க்கை பெறுவது நல்லதல்ல. அந்த இணைப்பு வாழ்க்கையில் பல சவால்களையும் எதிர்மறை பலன்களையும் ஏற்படுத்தக்கூடும்.
மேலும் செய்திகள்





