பனி மற்றும் உறைபனி காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நார்ஃபோக் மாநிலத்தின் மார்ஹம் பகுதியில் குறைந்தபட்சமாக -12.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆர்க்டிக் காற்று தாக்கம் தொடர்ந்தும் நிலவுவதால், இன்று செவ்வாய்க்கிழமை (06) ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துகளில் கடும் இடையூறு ஏற்படலாம் என்றும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கடும் குளிரிலிருந்து பெரிதும் பாதிக்கப்படாதிருந்த தென் கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில், வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு வரை “அம்பர்” எச்சரிக்கை அமலில் உள்ளது. இதேவேளை, ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை 11 மணி வரை “மஞ்சள்” எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் 5 முதல் 10 செ.மீ வரை கனமான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சில இடங்களில் 15 செ.மீ வரை பனி பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஹைலாண்ட்ஸ் பகுதியில் உள்ள டல்வின்னி நகரில் -11.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் காணப்படுவதால், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த கடும் குளிர் காரணமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. வேல்ஸ் பகுதியில் மட்டும் 330க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், வடக்கு அயர்லாந்தில் 170க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அபெர்டீன்ஷையர், ஆர்க்னி மற்றும் ஷெட்லாந்து பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் நார்ஃபோக் பகுதியில் 20 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், டெவான் பகுதியில் சில பாடசாலைகள் தாமதமாக திறக்கப்பட்டன.
திங்கள் அன்று பல பகுதிகளில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெதர்லாந்துக்கு செல்லும் யூரோஸ்டார் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. “அதீதமான பனி” காரணமாக பனியை அகற்றும் வாகனங்கள் முன்னேற முடியவில்லை என நெட்வொர்க் ரெயில் ஸ்காட்லாந்து தெரிவித்துள்ளது. எடின்பர்க் மற்றும் அபெர்டீன் இடையிலான பயணங்களை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை தவிர்க்க வேண்டும் என எல்என்இஆர் அறிவுறுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் வடக்கு பகுதிகளில் நாள் முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என தேசிய ரயில் சேவை தெரிவித்துள்ளது.
இந்த கடும் குளிர் நிலை விரைவில் முடிவடையும் அறிகுறிகள் இல்லை. வாரத்தின் பின்னர், வலுவான காற்றும் கனமழையும் இணைந்து மேலும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




