ஜாம்பவான் சாதனையை முறித்த ஹர்மன்பிரீத்! ஆட்டநாயகி விருதுடன் நீண்ட கால சாதனை முறியடிப்பு

ஹர்மன்பிரீத்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா – இலங்கை இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அசத்தலான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்து, முன்னாள் ஜாம்பவான் மிதாலி ராஜின் நீண்ட கால சாதனையையும் சமன் செய்துள்ளார்.

டிசம்பர் 30, 2025 அன்று கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, 2025 ஆம் ஆண்டின் கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆட்டமாகவும், ரசிகர்களுக்கு புத்தாண்டுக்கான சிறந்த பரிசாகவும் அமைந்தது.

முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், தனது 23 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் 89 டி20 போட்டிகளில் விளையாடி, 12 முறை ‘ஆட்ட நாயகி’ (Player of the Match) விருதை வென்று சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனையைத் தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 187வது சர்வதேச டி20 போட்டியில் சமன் செய்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்த ஐந்தாவது டி20 போட்டியில் வென்ற ஆட்டநாயகி விருது, அவரது 12வது தனிப்பட்ட வெற்றியாக அமைந்தது.

போட்டியின் போக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 4.1 ஓவரில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியிருந்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ஹர்மன்பிரீத், முதலில் பொறுமையாகவும், பின்னர் அதிரடியாகவும் ஆடி, 43 பந்துகளில் 68 ரன்கள் (9 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து, அணியின் மொத்த ஸ்கோரை 175 ரன்களாக உயர்த்தினார். அமன்ஜோத் கவுருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் திசையையே மாற்றியது. இலக்கை நோக்கி இலங்கை அணி 160 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி, இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஷஃபாலி வர்மா வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடர் நாயகி (Player of the Series) விருதை வென்றார். இது அவரது மூன்றாவது தொடர் நாயகி விருதாகும். இதன் மூலம், டி20 வரலாற்றில் அதிக முறை இந்த விருதை வென்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் ஷஃபாலி வர்மாவும் சமமாக இணைந்துள்ளார் – அனைவரும் தலா 3 முறை இந்த கௌரவத்தைச் சூட்டியுள்ளனர்.

 

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net