இங்கிலாந்தில் இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் ட்ரோன்கள் பரிசுப் பொருள்களாக அதிகளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு தொடங்கும் ஜனவரி 1 முதல் ட்ரோன் பயன்பாட்டில் முக்கியமான புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.
இப்புதிய விதிகளின் படி, பொதுவெளியில் ட்ரோன் அல்லது மாதிரி விமானங்களை பறக்க விட விரும்புவோர் கட்டாயமாக இணைய வழி தேர்வை முடித்து Flyer ID பெற வேண்டும். இதற்கு முன்பு 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ட்ரோன்களுக்கு மட்டுமே இந்த நிபந்தனை இருந்தது. ஆனால் தற்போது, 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள அனைத்து ட்ரோன்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்த மாற்றத்தால் இங்கிலாந்தில் சுமார் ஐந்து இலட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority – CAA) மதிப்பிட்டுள்ளது. ட்ரோன்கள் இப்போது “கிறிஸ்துமஸின் பொதுவான பரிசாக” மாறிவிட்டதால், பயனர்கள் சட்ட விதிகளை நன்கு அறிந்து பின்பற்றுவது அவசியம் என CAA பேச்சாளர் ஜோனாதன் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
அனைத்து ட்ரோன் பயனர்களும் பதிவு செய்து Flyer ID பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும், மகிழ்ச்சியுடன் ட்ரோன்களை பயன்படுத்தும் போதே எங்கு, எப்படி பறக்க விட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய விதிகளின் கீழ், 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ட்ரோன் வைத்திருப்பவர்கள், ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் Flyer ID பெற தியரி தேர்வை கட்டாயமாக முடிக்க வேண்டும். அதேசமயம், கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்களை வைத்திருப்பவர்கள் CAA-யில் பதிவு செய்து Operator ID பெறுவதும் அவசியமாகும்.
இந்த விதிகள் குழந்தைகளுக்கும் பொருந்தும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தியரி தேர்வை எழுதும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகில் இருக்க வேண்டும். 12 வயது அல்லது அதற்குக் குறைவானவர்கள் ட்ரோன் பறக்க விடும் போது, 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மேற்பார்வை செய்ய வேண்டும். மேலும், பெற்றோர்கள் Operator ID பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் பறக்க விடத் தடை செய்யப்பட்ட பகுதிகள், கேமரா கொண்ட ட்ரோன்கள் மூலம் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் புதிய விதிகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. தேவையான ID-கள் இன்றி ட்ரோன் பறக்க விடுவது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதம் அல்லது கடுமையான சூழலில் சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும் CAA எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கென்ட் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளர் டாக்டர் அலன் மெக்கென்னா, இந்த விதிகளை எவ்வளவு திறம்பட அமல்படுத்த முடியும் என்பது கிடைக்கக்கூடிய வளங்களைப் பொறுத்தே இருக்கும் என கூறியுள்ளார். பெரும்பாலானவர்கள் விதிகளை பின்பற்றுவார்கள் என்றாலும், சிலர் கண்காணிப்பைத் தவிர்த்து ட்ரோன் பறக்க விட முயற்சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு, தனியுரிமை மீறல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் நாளுக்கு நாள் முக்கியமான பிரச்சினைகளாக மாறி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



