2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா தொடர்பில் கனடா அறிவித்த அதிரடி தீர்மானம்

மாணவர் விசா

2026 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு உச்சவரம்பு விதிக்கும் வகையில், கனடாவின் குடியேற்ற அமைச்சர் Lena Diab புதிய அமைச்சரவை உத்தரவுகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, கல்வி விசா (study permit) பெற விரும்பும் மாணவர்கள், மாகாணம் அல்லது பிரதேச அரசுகள் வழங்கும் அங்கீகாரக் கடிதங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம், அடுத்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர் விண்ணப்பங்களை சுமார் 3.10 லட்சத்திற்கும் குறைவாக கட்டுப்படுத்த கனடா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவுகள் சனிக்கிழமை கனடா அரசின் அதிகாரப்பூர்வ இதழான Canada Gazette-இல் வெளியிடப்பட்டன. அங்கீகாரக் கடிதங்களில் மாணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் ஆண்டு குடியேற்ற இலக்கு திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 1.55 லட்சம் சர்வதேச மாணவர்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனுடன், ஸ்டார்ட்அப் விசா மற்றும் சுயதொழில் (self-employed) அடிப்படையிலான நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்களை 2026 ஜனவரி 1 முதல் இடைநிறுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த இடைநிறுத்தம் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுத் துணை மற்றும் குழந்தை பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் குடியேற்ற பராமரிப்பு தொழிலாளர்களுக்கான நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்கள், மார்ச் 31, 2026 அன்று மீண்டும் திறக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, இந்த விண்ணப்பப் பிரிவு 2030 மார்ச் 30 வரை மீண்டும் திறக்கப்படாது; அமைச்சர் புதிய வழிகாட்டுதல் வழங்கினால் மட்டுமே மாற்றம் சாத்தியம் என கூறப்பட்டுள்ளது.

மாணவர் விசா

விண்ணப்பங்கள் மிக அதிக அளவில் நிலுவையில் இருப்பதே இந்த இடைநிறுத்தங்களுக்கு காரணம் என கனடா அரசு விளக்கமளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, Migrant Rights Network திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பராமரிப்பு தொழிலாளர்களுக்கான நிரந்தர குடியுரிமை விண்ணப்ப இடைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரிவே அந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறும் ஒரே வழி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2025 மார்ச் 31 அன்று திறக்கப்பட்ட கடைசி விண்ணப்ப சாளரம் வெறும் 4.5 மணி நேரத்தில் மூடப்பட்டதாகவும், இதனால் சுமார் 40,000 குடியேற்ற பராமரிப்பு தொழிலாளர்கள் நிரந்தர குடியுரிமை வாய்ப்பை இழந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது பராமரிப்பு தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை செயலாக்க 21 முதல் 33 மாதங்கள் வரை ஆகும் என அரசு தரவுகள் காட்டுகின்றன.

ஸ்டார்ட்அப் விசா பிரிவில் மட்டும் 44,000-க்கும் அதிகமான பொருளாதார குடியேற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 2020 ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு மாதத்தில் முடியும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு காலம் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net