U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் 191 ரன்களில் சரிந்த இந்திய இளம் அணி – என்ன நடந்தது?

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

துபாயில் நடைபெற்ற 2025 அண்டர்-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா U19 கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் U19 கிரிக்கெட் அணியிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது. டாஸ் வென்றது தவிர, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தான் அணியே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சமீர் மின்ஹாஸ் ஆட்டமே ஆட்டத்தை மாற்றியது. அவர் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 172 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். அகமது ஹுசைன் 56 ரன்கள் சேர்க்க, 50 ஓவர்களில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 347 ரன்கள் என இமாலய ஸ்கோரை எடுத்தது. இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும், அதிக ரன்களை வழங்கினார். கிலான் பட்டேல் மட்டும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

348 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் கொடுத்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததும், இந்திய பேட்டிங் வரிசை அடுத்தடுத்து சரிந்தது. கேப்டன் ஆயுஷ் மத்ரே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விரைவில் வெளியேற, 9.5 ஓவரில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது.

கடைசி கட்டத்தில் தீபேஷ் தேவேந்திரன் 16 பந்துகளில் 36 ரன்கள் விளாசி சிறிதளவு ஆறுதல் அளித்தார். இருப்பினும், இந்திய அணி 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அலி ரசா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 191 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 2025 அண்டர்-19 ஆசிய கோப்பை சாம்பியனாகியது. லீக் சுற்றுகளில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இறுதிப்போட்டியில் இப்படிச் சரிந்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்