இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான (பி.சி.சி.ஐ) 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைமையை சூரியகுமார் யாதவ் ஏற்றுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த அணியே வரும் சில நாட்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடர், உலகக் கோப்பைக்கு முன்னதாக நடக்கும் கடைசி டி20 தொடராக இருப்பதால், இதுவும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இன்றைய அறிவிப்பில் ஒரு விஷயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – அதாவது, வழக்கமாக ஐசிசி தொடர்களுக்கு அணி அறிவிக்கும்போது 4 முதல் 5 ரிசர்வ் வீரர்களையும் அறிவிப்பது வழக்கம். ஏனெனில், போட்டிகளின் இடையே காயம் அல்லது பிற காரணங்களால் அணியில் களமிறங்க இயலாத வீரர்களுக்குப் பதிலாக ரிசர்வ் வீரர்களை உடனடியாக நியமிக்க வசதி இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த ரிசர்வ் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாதது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்தது. இது குறித்து பி.சி.சி.ஐ தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்த டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுவதால், எப்போது வேண்டுமானாலும் தேவைக்கேற்ப மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய முடியும். எனவே, தற்போதைய கட்டத்தில் குறிப்பிட்ட ரிசர்வ் வீரர்களை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தேவைப்படும்போது, அணியின் தேவைக்கு ஏற்ப ஏதாவது ஒரு வீரரை உடனடியாக சேர்க்க முடியும். ஏனெனில், இந்தியாவில் இடம் பிடிக்க காத்திருக்கும் பல்வேறு திறமையான டி20 வீரர்கள் ஏராளமாக உள்ளனர்” எனவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்





